பாவூர்ச்சத்திரம் அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அவரது நண்பரை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதுடைய சுடலைமணி. இவர் பாவூர்சத்திரத்தில் உள்ள இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 14ஆம் தேதி காலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.மேலும் நான்கு தனிப்படைகள் அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சுடலைமணியை கொலை செய்தது அவருடைய நண்பரான 24 வயதுடைய சுலைமான் என்று தெரியவந்தது. இதையடுத்து சுலைமானை காவல்துறையினர் கைது செய்தனர் . அவர் காவல்துறையினரிடம் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.அதன் விவரம் பின்வருமாறு :
சுடலைமணி வேலை செய்யும் பகுதிக்கு அருகே நான் வசித்து வந்தேன் . நானும் சுடலை மணியும் நண்பர்களாக இருந்தோம் . கடந்த 13ஆம் தேதி இரவில் நாங்கள் இருவரும் அங்குள்ள தோட்டத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்து சுடலைமணியின் தலையில் தூக்கி போட்டு கொலை செய்தேன். இவ்வாறு சுலைமான் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைதான சுலைமானை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 2019ஆம் ஆண்டு நடந்த கொலையிலும் சுலைமானுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.