இளம் பெண்ணை ஓடும் ரயிலில் தள்ளி கொலை முயற்சி செய்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
மராட்டிய மாநிலத்தில் அந்தேரி பகுதியில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் சக ஊழியரான இளைஞரே இவரை கொல்ல முயன்றுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. வெள்ளிக்கிழமை பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிய இளம்பெண்ணை, இளைஞர் பின்தொடர்ந்து ரயில் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளார். இதனிடையே அந்த இளைஞன் பின் தொடர்வதாக அறிந்த இளம்பெண், ரயில் நிலையத்தில் தனது தாயாரை காத்திருக்க தகவல் அளித்துள்ளார்.
இந்த வேளையில் இளைஞர் அந்த இளம்பெண்ணை தாக்க முயல, தாயாரும் மகளும் சேர்ந்து தடுக்க முயன்றுள்ளார். அப்போது நடைபாதையில் தடுமாறி விழுந்த இளம்பெண்ணை,அந்த இளைஞர் தண்டவாளம் அருகே இழுத்துச் சென்றுள்ளார். அப்போது கடந்து சென்ற ரயில் ஒன்றில் பெண்ணின் தலை மோதியதால் பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் உதவிக்கு நெருங்கிய நிலையில் அந்த இளைஞன் அங்கிருந்து தப்பியுள்ளார். தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட இளம்பெண், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த சம்பவத்திற்கு தொடர்பான 24 வயது இளைஞரை கைது செய்துள்ளனர்.