இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு வங்கி அதிகாரியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வங்கி அதிகாரி திருமணம் முடிந்ததும் வேளாங்கண்ணியில் உள்ள வங்கிக்கு சென்று விட்டார். இதனால் இளம்பெண் மாமனார் மாமியாருடன் வசித்து வருகிறார். அப்போது இளம்பெண்ணின் மாமனார் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது கணவர் மற்றும் மாமியாரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் இளம்பெண் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் இளம் பெண்ணின் கணவர் அந்த பெண் மீது விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் பெண்ணின் பெற்றோர் கணவர் குடும்பத்தினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த இளம்பெண்ணை கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் அவதூறாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த இளம்பெண் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவர், மாமியார் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.