திருமணமாகாத நேபாள இளம்பெண் கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்தவுடன் மண்டை ஓட்டை நசுக்கி கொலை செய்தது தொடர்பான வழக்கில் அவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் புதுவித தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமாகாத தற்போது 24 வயதாகும் பபிதா என்னும் இளம்பெண் 6 மாத கர்ப்பமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமணமாகாமல் இருந்ததால் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட பபிதா இங்கிலாந்தில் அல்டர் ஷார்ட் என்னும் நகரத்திலுள்ள பூங்காவிற்கு சென்று அங்கேயே குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.
அதன்பின் இவர் அந்தக் குழந்தையை எடுத்து செல்லாமல் அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சுமார் 4 நாட்கள் கழித்து அப்பகுதிக்கு சென்ற பூங்காவின் தொழிலாளர் ஒருவர் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
அந்த மருத்துவமனை பரிசோதனையின் முடிவில் குழந்தை பிறந்த 6 மணி நேரத்திலேயே மண்டையோட்டில் பலமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளியே வந்துள்ளது. இந்த சம்பவத்தை வழக்காக பதிவு செய்த காவல் அதிகாரிகள் தீவிர தேடுதலின் பேரில் பபிதாவை கைது செய்துள்ளார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் பபிதா குழந்தையை அங்கேயே போட்டுக் கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் தான் குழந்தையின் மண்டையை அழுத்தி கொல்லவில்லை என்று திட்டவட்டமாக கூறி அதனை மறுத்துள்ளார். மேலும் இவர் தரப்பு வாதாடிய வக்கீல் குழந்தை பிறந்த நேரத்தில் பபிதா PTSD என்னும் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் பபிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டதோடு மட்டுமின்றி அவருக்கு தண்டனையாக 85 பவுண்டுகள் சட்டரீதியான கட்டணத்தையும் விதித்துள்ளது.