இளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்ராஜ் என்ற மகன் உள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பாலதண்டாயுதநகர் பகுதியில் வசிக்கும் மாரிசெல்வி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் அண்ணா நகரில் வசித்து வந்தனர். இந்நிலையில் மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக பொன்ராஜ் அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவரிடையே தகராறு ஏற்பட்டு பொன்ராஜ் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் பொன்ராஜ் தனது நண்பர்களுடன் பாலதண்டாயுதம் நகரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாரிசெல்வியும் பொன்ராஜும் வீட்டின் காம்பவுண்ட் உள்பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதனை தடுக்க வந்த மாரிசெல்வியின் தாயார் மாரியம்மாளின் கையில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாரிசெல்வி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரிசெல்வியின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாரியம்மாளை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய பொன்ராஜ் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.