கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யாநகர் பகுதியில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த ஒரு வருடமாக நடந்த வழக்கு விசாரணையில் முத்துக்குமார் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதனால் தனியாக வசித்து வந்த செல்வராணி தற்போது கணவர் முத்துக்குமார் வீட்டில் வசித்து வருகிறார். இதனை கண்டித்து முத்துகுமாரின் அண்ணன் சத்ய பிரகாஷ் வீட்டிலுள்ள பாத்திரங்களை எடுத்து சென்றுள்ளார்.
இதனால் செல்வராணி தன்னை கணவரிடம் சேர்த்து வைக்க வேண்டும் எனவும், வீட்டில் இருந்து எடுத்து சென்ற பாத்திரங்களையும் தரவேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி மெஞ்ஞானபுரம் காவல்நிலையம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அருகில் இருந்த காவல்துறையினர் செல்வராணி மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றி அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.