இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இனாம்காரியந்தல் கிராமத்தில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் திவ்யா கடந்த 28-ஆம் தேதி அவரது தாய் வீட்டில் இருந்தபோது திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் திவ்யாவை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து திவ்யா மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த திருவண்ணாமலை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திவ்யாவிற்கு சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர் தீக்குளித்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.