கணவர் அடிக்கடி மது அருந்தியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் 24 வயதுடைய கார்த்தி. இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ரேணுகா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கார்த்தி அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனை ரேணுகா கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கார்த்தி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்ததால் ரேணுகா அவரை கண்டித்துள்ளார். அதனை தொடர்ந்து இன்று காலை ரேணுகாவை சமாதானப்படுத்துவதற்காக கார்த்தி மீன் மார்க்கெட் சென்று மீன் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தார்.
அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரேணுகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேணுகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் வழக்குப்பதிவு செய்து கார்த்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேணுகாவின் தந்தை மது பழக்கம் உடையவர் என்பதால் தனது கணவர் மது அருந்தக் கூடாது என்ற நிபந்தனையுடன் ரேணுகா திருமணம் செய்து கொண்டார். ஆனால் கார்த்தி நிபந்தனையை மீறியதால் மனமுடைந்த ரேணுகா தற்கொலை செய்து கொண்டார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.