உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் மர்மான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பெண்ணின் சகோதரர் அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மஜ்ரா தேரா என்ற கிராமத்தில் ஹரிம் நாயக் – ஆர்த்தி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. மேலும் இவர்களுக்கு 8 மாதத்தில் சிவா என்ற குழந்தையும் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை திடீரென்று ஆர்த்தி தூக்கில் தொங்கியுள்ளார். ஆனால் ஆர்த்தி உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினருக்கு கணவரின் குடும்பத்தினர் மறைத்துள்ளனர்.
இருப்பினும் பக்கத்து வீட்டு காரர்களுக்கு இந்த தகவல் தெரிய வந்ததால் அவர்கள் ஆர்த்தியின் குடும்பத்தினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆர்த்தியின் குடும்பத்தினர் உடனடியாக ஹரிம் நாயக்கின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஹரிம் நாயக் வெளியூருக்கு சென்றிருந்தது அப்போதுதான் ஆர்த்தியின் குடும்பத்திற்கு தெரிய வந்தது. இந்நிலையில் ஹரிம் நாயக்கின் தாயும், தந்தையும் ஆர்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர்.
அப்போது ஆர்த்தியின் சகோதரர் தீபக் கூறியதாவது, ” ஆர்த்தியின் முதுகில் காயங்கள் இருக்கிறது. அவளை அடித்துக் கொன்று தான் தூக்கில் தொங்க விட்டுள்ளனர்” என்று கண்ணீருடன் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனையின் முடிவில் தான் ஆர்த்தியின் மரணத்திற்கான உண்மையான காரணம் வெளிவரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.