மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் நட்புடன் பழகியுள்ளார். இருவருக்குமிடேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் இளைஞருடனான பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை அந்த இளைஞன் பின் தொடர்ந்து சென்றுள்ளான்.
இளைஞர் தன்னை பின்தொடர்வதை அறிந்து அந்த இளம்பெண் ரயில் நிலையத்தில் தனது தாயை வந்து நிற்குமாறு செல்போனில் தகவல் அளித்துள்ளார் . பின்னர் இளம்பெண் ரயில்நிலையத்திற்குள் நுழைந்ததும் அந்த இளைஞன் அவரை தாக்க முயன்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் தாயார் இளைஞனை தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் அந்த பெண்ணை தண்டவாளத்திற்கு அருகே இழுத்து சென்றபோது அந்த வழியாக கடந்து சென்ற ரயில் பெண்ணின் தலையில் பலமாக மோதியது. இதனை கண்டவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்ட போது இளைஞன் தப்பியுள்ளான். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக இளைஞனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.