திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் மீது இளம்பெண் கைக்குழந்தையுடன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி பகுதியில் கார்த்திகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகாவும் அரியக்குடி பகுதியில் இருக்கும் தமிழ்ச்செல்வனும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின் தமிழ்செல்வன் கார்த்திகாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து தமிழ்ச்செல்வன் வேலை பார்ப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் தமிழ்ச்செல்வனை அலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட கார்த்திகா தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு தமிழ்ச்செல்வன் கார்த்திகாவிடம் கர்ப்பமாக இருப்பதை தற்போது வெளியே யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும், நான் ஊருக்கு திரும்பி வந்தபின் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார். இதனால் கார்த்திகா கருகலைப்பு செய்யாமல் அவரை நம்பி குழந்தை பெற்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஊருக்கு திரும்பி வந்த தமிழ்செல்வனிடம் கார்த்திகா திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு தமிழ்ச்செல்வன் மறுப்பு தெரிவித்ததால் ஏமாற்றமடைந்த கார்த்திகா காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.