இலங்கை தாதா அங்கொட லொக்கா உயிரிழப்பு தொடர்பான உடற்கூறு ஆய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை போதைப்பொருள் கடத்தல் கும்பலின் நிழலாக இருந்தவர் தாதா அங்கொட லொக்கா. அவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கோவையில் பிரதீப் சிங் என்ற பெயரில் வசித்து வந்துள்ளார். கோவை காளப்பட்டியில் தனது காதலியுடன் வசித்து வந்த அவர், சென்ற மாதம் ஜூலை 4 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உடல் மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை காளப்பட்டி பகுதியில் அவருடன் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த அமானி தான்ஜி என்ற பெண், போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் திருப்பூரை சேர்ந்த அவரின் நண்பர் தியானேஸ்வரன் ஆகியோரை கோவை மாநகர காவல் துறையினர் கைது செய்தார்கள்.
இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் கோவை,திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு ஆவணங்களை திரட்டியுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள மூன்று நபர்களையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அங்கொட லொக்காவின் பிரேதப் பரிசோதனை முடிவு வெளியாகியுள்ளது.
அந்த பரிசோதனை முடிவில், அவரின் கை மற்றும் கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதே சமயத்தில் இதற்கு முன்னதாக அவரின் உடல் பாகங்கள் தடயவியல் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், விஷம் வைத்து அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணையை மிகவும் தீவிரமாக நடத்தி வருகின்றனர். ஆனாலும் ரசாயன அறிக்கை வெளியான பின்னரே விஷம் வைத்து கொல்லப்பட்டாரா? இல்லை இயற்கையான மரணமா? என்பது வெளிச்சத்திற்கு வரும்.