இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. கடந்த 14ஆம் தேதி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் விளையாடி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களை எடுத்தது. அதற்குப் பின்பு ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 421 ரன்கள் எடுத்தது.
அதனால் 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி லஹிரு திரிமான் எடுத்த சதத்தின் உதவியுடன் 359 ரன்களை பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 74 ரன் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த எளிய இலக்கை இங்கிலாந்து வீரர்கள் நேற்றே எடுத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களை திணற வைத்தனர்.
இறுதியாக நேற்றைய ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்களை எடுத்தது. போட்டியின் 5வது மற்றும் இறுதி நாளான இன்று வெற்றிக்கு 36 ரன்கள் மட்டும் தேவை என்ற நிலையில் விளையாடிய இங்கிலாந்து அணி 24.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.