இலங்கையில் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றது 4 தமிழர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிபர் கோத்தபாய ராஜபக்க்ஷ தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அண்ணனும் முன்னாள் அதிபருமான மஹிந்த ராஜபக்க்ஷ பிரதமராக இருந்து வந்தார. 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் இலங்கை மக்கள் கட்சி 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்றார்.
அதிபர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று 28 கேபினட் மற்றும் 40 ராஜாங்க அமைச்சர்களை நியமித்தார். புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா கண்டி நகரில் நேற்று நடைபெற்றது. ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ஷ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார். அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, சதாசிவம் வியாழேந்திரன், தொண்டைமான் ஆகிய நான்கு தமிழர்கள் இடம் பெற்றுள்ளனர்.