இளையராஜா இந்திய சினிமாவின் இசை முகவரி. தமிழ்திரை இசைக்கு வெள்ளித்திரையில் கம்பீரம் கூட்டிய இசை சாம்ராஜ்யம். ஸ்வரங்களாலும் மெட்டுகளாலும் இளையராஜா கட்டமைத்த இசை என்னும் பெரும் கோட்டை உலக மக்களின் கடவுள் தேசமாகவே வரலாறு கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அன்னக்கிளியில் தொடங்கிய ராஜாவின் ராஜாங்கம் மெல்லிய காற்றாய் தமிழர்களின் இதயங்களை நீவியிருக்கிறது.
பெரும் கோபமாய் ருத்ரதாண்டவம் நிகழ்த்தியிருக்கிறது. சாரம் மழையாய் வயல்வெளிகளிலும் பளிச்சென்று இருக்கிறது. மொத்தத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் வாழ்வில் ஊறிப்போய் மக்களின் வாழ்க்கையை செதுக்கிக் கொண்டே பயணிக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் பாடகராக இருந்த அண்ணன் பாவலர் வழியில் இளையராஜா இசை பயின்றாலும் தன்ராஜ் மாஸ்டர் தான் இளையராஜாவுக்கு இசை நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து மெருகேற்றினார்.
எம்எஸ் விஸ்வநாதனின் இசை குழுவில் இணைய வேண்டும் என்பது இளையராஜாவின் பெருவிருப்பம் அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் ஜி.கே வெங்கடேசன் குழுவில் இணைந்தார். பின்னர் சலில்சௌத்திரி என்ற உன்னத கலைஞனின் வழிகளிலும் தொடங்குகிறது இளையராஜாவின் திரை இசைப் பயணம். செம்மின் போன்ற படங்களில் சலில்சௌத்திரியின் இசைப் பின்னணி அன்னக்கிளியில் ராஜாவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது காணமுடியும்.
தமிழ் திரைப்படங்களில் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட்டு வித்தைக்காரன் இளையராஜா. மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் வெளியான மௌனராகம் திரைப்படத்தின் பின்னணி இசை சந்ததிகள் கடந்து இன்றும் காதலை நடத்தி கொண்டிருக்கிறது. இளையராஜா எஸ்பிபியின் நட்பு திரையில் நிகழ்த்திக் இரசவாதம் அரை நூற்றாண்டுகள் மக்களை இசையால் கட்டிப் போட்டது என்று சொல்லவேண்டும்.
உதிரிப்பூக்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் இயக்குனர் மகேந்திரனும் மூடுபனி, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களில் பாலுமகேந்திராவிடம் 16 வயதினிலே உள்ளிட்ட பாரதிராஜாவின் படங்களில் இளையராஜா இசை சக்கரவர்த்தியாக கோலோச்சி இருந்தார். நடிகர் கமல்ஹாசன் ரஜினிகாந்த் மோகன் ராமராஜன் ஆகியோரின் சினிமா வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றதில் இளையராஜாவின் பங்கு அதிகம் இருக்கிறது.
வடக்கத்திய இசையின் ஆதிக்கம் செலுத்திய ஒரு காலகட்டத்தில் தனி ஒருவனாக இருந்து தமிழ் இசையை செழிக்கச் செய்து இசையை மக்களுக்கு நெருக்கமாக்கியது தொடங்குகிறது இளையராஜாவின் ராக ஆலாபனை. இசையின் ராஜாவாக தமிழ் மக்களின் மனங்களிலும் என்றும் நிலைத்து நிற்பவரே இளையராஜா