வேறு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம் மனைவிக்கு தெரிந்ததால் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வேம்கல் என்ற பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாந்தா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தன்னுடைய உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக ஓசூர் சென்றுள்ளனர். அங்கு வைத்து இருவருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் பிரவீன்குமார் சாந்தாவை அடித்து அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்பு அவரை அங்கிருந்து ஒரு ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு சாந்தாவின் பெற்றோர்களிடம் அவரின் உடலை ஒப்படைத்து விட்டு “உங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து விட்டாள்” என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனை அடுத்து சாந்தாவின் பெற்றோர் சாந்தாவை கவனிக்கும் போது அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சாந்தாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சாந்தாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரவீன் குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பிரவீன்குமார் கூறியதாவது “தனக்கும் வேறொரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் சாந்தாவிற்கு தெரியவந்ததால் நான் அவளை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வாக்குமூலத்தை வைத்துக்கொண்டு போலீசார் பிரவீன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.