கள்ளக்காதலனுடன் இணைந்து கணவனை கொன்ற மனைவி உடலை மண்ணுக்குள் புதைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சந்திராபுரம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் மதுக்கரை எல் அண்ட் டி பைபாஸ் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு கோலமாவு தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு வேலை பார்த்துள்ளனர். இந்நிலையில் அமுதாவிற்கும் அந்த நிறுவனத்தில் வெல்டிங் வேலை பார்த்து வந்த சங்கர் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ள காதலாக மாறிவிட்டது. இதனை அடுத்து பழகி ஆறு நாட்களே ஆகிய நிலையில் சங்கரின் அழைப்பை ஏற்று அமுதா வீட்டை விட்டு வெளியேறி தான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து குடிபோதையில் தூங்கிக் கொண்டிருந்த நாகராஜ் திடீரென எழுந்து பார்த்தபோது மனைவியை காணாததால் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அப்போது சங்கரும், அமுதாவும் நெருக்கமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த நாகராஜ் அவர்களை கண்டித்த போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சங்கர் நாகராஜனின் தலையில் சுத்தியலால் ஓங்கி அடித்ததோடு, கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டார். அதன்பின் அமுதாவும், சங்கரும் இணைந்து அந்த நிறுவனத்தில் மண்ணைத் தோண்டி நாகராஜன் உடலை புதைத்துவிட்டனர்.
இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் காலையில் மண் தோண்டப்பட்ட இடத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நாகராஜனின் புதைக்கப்பட்ட உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அமுதாவும் சங்கரும் இணைந்து நாகராஜை கொன்று மண்ணுக்குள் புதைத்தது தெரிய வந்துள்ளது. அதன்பின் இவர்களை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.