கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ராம்குமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. இவர்களில் முத்துலட்சுமி, வெங்கடாசலபதி என்பவருக்கு சொந்தமான பிரிண்டிங் பிரஸ்ஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்குமார் தனது மனைவிக்கும், வெங்கடாசலபதிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார்.
இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துலட்சுமி வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு ராம்குமார் நேரடியாக சென்று வெங்கடாசலபதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராம்குமாரை சமாதானப்படுத்துவதற்காக வெங்கடாசலபதி தனது மனைவியின் தம்பியான கோபிநாத் என்பவரையும், அவரது நண்பர் கருத்தபாண்டி என்பவரையும் அழைத்துள்ளார்.
இந்நிலையில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென வாக்குவாதம் முற்றி கோபமடைந்த கோபிநாத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராம்குமாரை குத்தியதால் சம்பவ இடத்திலேயே ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாகிய கோபிநாத் மற்றும் வெங்கடாசலபதி ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.