இலுப்பை மரத்தை அழிவிலிருந்து மீட்டு அதிகளவில் மரங்களை நட்டு பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசிற்கு இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணல்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள கீழாய், இழுப்பப்பட்டு, குறிச்சி, சுத்தமல்லி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில் இலுப்பை மரங்கள் தோப்புகளாகவும் தனித்தனி மரங்களாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தற்போது இந்த மரம் முற்றிலும் அழிந்து விடும் நிலையில் உள்ளது. இந்த மரம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னோர்களால் வளர்க்கப்பட்டு வந்தது. இந்த இலுப்பை மரம் அதிக அளவிலான மருத்துவ குணம் கொண்டது.
பொதுவாக இலுப்பை மரங்கள் மேகக் கூட்டங்களை தருவித்து மழையை வரவழைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் இது ஒரு வெப்பமண்டல தாவரம் என்பதால் வறண்ட நிலையிலும் எளிதாக வளரக்கூடியதாகும். இந்த மரம் சுமார் 60 அடி உயரம் வளரக்கூடியது. மேலும் இந்த இலுப்பை மரத்தின் எண்ணெய் வலி நிவாரணியாகவும் சமையலுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அதை தவிர பாம்பு விஷம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், வாத நோய், சர்க்கரை வியாதி, சளி, இருமல், மூலநோய், வாய்ப்புண், வயிற்றுப்புண், சுவாசக்கோளாறு ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இலுப்பைப்பூ ஊறுகாய் காச நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. எனவே இந்த இலுப்பை மரத்தை அழிவிலிருந்து மீட்டு அதிகளவில் மரங்களை நட்டுப் பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.