திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட்டர் மூலமாக கட்சி தொண்டர்கள், மக்களிடம் பேசினார்.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் இன்று ட்விட்டர் வாயிலாக பேசினார் அதில், அனைவருக்கும் அன்பான வணக்கம். கொரோனா என்ற கொடிய வைரஸ் தொற்றின் காரணமாக இன்றைக்கு நாடே முடங்கிக் கிடக்கின்றது. இதனால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு எங்களால் முடிந்த உதவியை செய்யனும் என்ற நல்ல நோக்கத்துக்காக தான் ஒன்று இணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கினேன்.
மளமளவென போன் வந்துச்சு:
அன்றாட தினக்கூலிகள், அமைப்பு சாரா பணியாளர்கள், ஏழைகள், விவசாய தொழிலாளர்களுக்கு மேலும் தேவைப்படும் மக்களுக்கு உணவும், மருந்தும் பொருளும் வாங்கி கொடுக்கலாம் என்ற எண்ணத்தோடு ஏப்ரல் 20ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கினோம்.இதற்காக 9073090730 என்ற மக்கள் உதவி எண் அறிவிச்சும். அறிவிச்ச மறுநாளே மளமளவென போன் வர ஆரம்பிச்சுடுச்சு. இதுவரைக்கும் எங்களுக்கு 15 லட்சம் அழைப்புக்கள் மக்களிடமிருந்து வந்திருக்கு.
சங்கிலி தொடர் போல:
இதுக்காகவே தனியா ஒரு அலுவலகத்தை அமைக்கவேண்டியதா இருந்துச்சு. மக்களோட போனில் பேசுவது, அவங்க கேக்குற உதவிகளை குறித்தது வைப்பது. இத அவங்க இருக்கிற பகுதியில் இருக்குற திமுக நிர்வாகிகளுக்கு சொல்றது. என்னார் வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று மக்களுக்கு தகவல் சொல்கிறது. உதவி கிடைச்சுருச்சானு கேட்குறது. அவங்க எதிர்பார்ப்பை பூர்த்தி ஆயிடுச்சா என்று செக் பண்றது. மிகப் பெரிய சங்கிலி தொடர் போல இயங்கினோம்.
14 லட்சம் பேருக்கு உணவு:
இதற்காகவே ஏராளமான நண்பர்கள் என்னுடைய அலுவலகத்தில் இருந்து செயல்பட்டார்கள். இப்படி இயங்கியதால் 15 லட்சம் அழைப்புகளையும், சரிபார்த்து தேவையானவர்களுக்கு எங்களால உதவியை செய்ய முடிஞ்சது.இதே மாதிரி இன்னொரு சேவையும் செஞ்சோம். அது தான் உணவளித்தல். வீடு இல்லாதவங்க, சமையல் செய்து சாப்பிட கூட வழியில்லாதவர்களுக்கு உணவுகளை தயாரித்து கொடுக்கிறது. இன்றைக்கு வரைக்கும் 14 லட்சம் பேருக்கு உணவுகள் வழங்கியிருக்கோம் என்று முக ஸ்டாலின் தெரிவித்தார்.
அனைவரிடமும் பேசினேன்:
இதற்காக உணவுக் கூடங்கள் ஏற்பாடு செய்து, சமையல் பண்ணி, தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்தோம். அவர்கள் அனைவருக்கும் மக்களிடம் கொடுத்தாங்க. தினமும் திமுக நிர்வாகிகளுடன் பேசினேன், இந்த பொருட்களை கொண்டு போய் கொடுத்த தன்னார்வலர் கிட்ட பேசினேன். பயனடைந்த மக்களிடமும் பேசினேன். எல்லாரு முகத்திலும் மகிழ்ச்சியை பார்த்தேன். நாங்க விரும்பினது கிடைச்சிருச்சுனு அவங்க சொல்லும்போது எனக்கு மன நிறைவா இருந்துச்சு.
உங்களை வணங்குகின்றேன்:
கொரோனா காலத்திலும் சலைக்காமல், இரவு பகல் பாராமல், வேகாத வெயில்ல அலைஞ்சாங்க திமுக நிர்வாகிகள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல. நீங்கள் அனைவரும் இருக்கக்கூடிய திசை நோக்கி நான் வணங்குகின்றேன். தங்களை பற்றி கவலைப்படாமல் மக்களைப் பற்றி மட்டுமே கவலைப்படுவது தான் திமுக தொண்டர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னது மாதிரி எல்லா பதவியையும் பதவியா நினைக்காம பொறுப்பாக நினைக்கிறவன் தான் திமுக கழக நிர்வாகிகள்.
அரசாங்கம் செயல்படவில்லை:
எங்களால் முடிந்த உதவிகளை இந்த 20 நாட்களாக செஞ்சுட்டு வந்தோம். நமக்கு வருகின்ற கோரிக்கையை வைத்துப் பார்க்கும்போது அரசாங்கம் செயல்படவே இல்லை என்று தெரிகின்றது. அரசாங்கமும், அரசு பதவியில் உள்ளவர்களும் மக்களுக்கான கடமையை செய்யும் பொறுப்பில் இருந்து தவறக் கூடாது. நான் முன்பே சொன்ன மாதிரி நாம அரசாங்கம் கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை முடிந்தவரை நாங்க செஞ்சிருக்கோம்.
செயல்பட வைப்போம்:
எப்படிப்பட்ட உதவிகளை, எந்த மாதிரியான திட்டமிடுதலுளோடு அரசாங்கம் செய்யணுனு நாங்க காட்டியிருக்கும். இதன் தொடர்ச்சியாக எங்களிடம் வரும் கோரிக்கைகளை இணையத்தின் மூலமாக அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு போய் சேர்க்கப்போறோம். அதாவது மக்களின் கோரிக்கைக்கு செவி மடுக்க அரசாங்கத்தை செயல்பட வைக்க போகிறோம்.
5 பேர் கொண்ட குழு:
நானே முதலமைச்சர்கள் அலுவலகத்துக்கு அந்த மனுக்களை அனுப்ப போறேன். அவர் அதனை கண்டு கொள்ளவில்லை என்றால் திமுகவினர் 5 பேர் கொண்ட குழு அமைத்து தலைமை செயலாளருக்கு இந்த கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்கப் போகிறோம். இதேபோல் மாவட்ட ஆட்சியருக்கும், துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பி வைப்பார்கள்.
ஒன்றிணைவோம் வா:
மக்களின் கோரிக்கைகளை ,வேண்டுகோள்களை ,தேவைகளை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று அரசாங்கத்தை செயல்பட வைப்போம் என்று உறுதியளிக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களின் நலனே எங்கள் தலையாய கடமையாகக் கொண்டு இருக்கிறோம் ஒன்றிணைவோம் வா என்று வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
நேரலை #மக்கள்_பணியில்_திமுக https://t.co/UqrJbWXPmx
— M.K.Stalin (@mkstalin) May 12, 2020