உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சமூக வலைதளமான twitter மற்றும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா போன்றவைகளும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் டுவிட்டர் நிறுவனம் 3800 ஊழியர்களையும், பேஸ்புக்கில் மெட்டா நிறுவனமானது 11,000 ஊழியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது.
இந்த பணி நீக்க நடவடிக்கைகளால் பல ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, புதிய வேலைகளை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு புதிய வேலையை தேடுபவர்களில் அமெரிக்காவில் வசிக்கும் H1B விசா வைத்திருப்பவர்களின் நிலைமை தான் சற்று மோசமானதாக இருக்கிறது. ஏனெனில் இந்த விசா வைத்திருப்பவர்கள் 60 நாட்களுக்குள் புதிய வேலையில் சேராவிட்டால் அவர்கள் மீண்டும் இந்தியா திரும்ப வேண்டும்.
இது போன்ற பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளில் பாதிக்கப்படும் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தியாவைச் சேர்ந்த டிரீம்11 நிறுவனமானது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஹர்ஷ் ஜெயின் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை தங்களுடைய நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களை தங்களுடைய நிறுவனத்தில் வேலையில் சேர்வதன் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சியில் நல்ல வளர்ச்சியை அடைய முடியும். எங்களுடைய நிறுவனத்தில் அனுபவமிக்க திறமைசாலியான ஊழியர்களை தேடி வருகிறோம். குறிப்பாக டிசைன், ப்ராடக்ட் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் தலைமை பொறுப்புகளில் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை தேடி வருகிறோம். எங்களுடைய நிறுவனத்தில் பணி உத்தரவு தரும்படி நல்ல நிதி நிலைமையும் இருக்கிறது.
நடப்பாண்டில் அமெரிக்காவில் சுமார் 52 ஆயிரம் இந்திய ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார்கள். இந்த இந்தியர்கள் மீண்டும் தாயகம் திரும்புவதை அவர்களுக்கு நினைவு படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம் இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியானது அடுத்த தசாப்தத்தை நோக்கி நகரும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அமெரிக்காவில் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களுக்கு இந்திய சிஇஓ வேலை வழங்குவதாக கூறப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலர் கூறுகிறார்கள்.