Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு: இர்பான் தந்தைக்கு காவல் நீட்டிப்பு….!!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் இர்பானின் தந்தை முகம்மது சபிக்கு அக்டோபர் 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்புடைய மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை 5 மாணவர்கள் மற்றும் அவர்களது தாய், தந்தை உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவன் இர்பானின் தந்தை முகமது சபியை வாணியம்பாடியில் வேலூர் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 30ஆம் தேதி கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தேனி சிபிசிஐடி அலுவலகம் கொண்டு வரப்பட்ட முகமது சபியிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் ஒரு போலி மருத்துவர் எனத் தெரியவந்தது. இதன் பின்னர் அக்டோபர் 2ஆம் தேதி தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.நீதிமன்றக் காவல் நேற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பன்னீர்செல்வம், நீதிமன்ற காவலை மேலும் 10 நாட்கள் நீடித்து வரும் 25ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து முகமது சபியை காவல்துறையினர் பாதுகாப்புடன் தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Categories

Tech |