சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன் பிறகு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் சபரிமலை நடை திறக்கப்படும். மகர விளக்கு ஜோதி வழிபாடு ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் எனவும் பின்னர் ஜனவரி 20ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆன்லைன் புக்கிங் அவசியம் என தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைனில் புக்கிங் செய்ய தவறியவர்களுக்காக சபரிமலையில் 12 இடங்களில் ஸ்பார்க் புக்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் ஏதாவது ஒன்று வைத்திருக்க வேண்டும். மேலும் இருமுடி கட்டுகளில் பிளாஸ்டிக் இல்லாமல் இருக்கும் வகையில் பக்தர்கள் கவனம் எடுக்க வேண்டும். பம்பை ஆற்றில் ஆடைகளை விடுவதையும் பக்தர்கள் தவிர்க்க வேண்டும்.
மேலும் சபரிமலை ஐயப்பன் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் மது மற்றும் போதைப்பொருள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மது,போதை மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வது மற்றும் பயன்படுத்துவது முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வியாபாரிகளும் இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.