15 கோடி மதிப்புள்ள செல்போன்களை திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.
சென்னை மாவட்டத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம கும்பல் லாரியை நிறுத்தி டிரைவரை தாக்கியுள்ளனர். அதன்பின் அந்த லாரியில் இருந்த 15 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் 15 கோடி மதிப்பிலான செல்போன்களை திருடிய குற்றத்திற்காக மத்திய பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் பரத் தேஜ்வாணி, கமல், அமிதாப் பாத்தா, பவானிசிங், ராஜேந்திரா சவுகான் மற்றும் இந்தூரில் வசித்து வரும் பரத் அஸ்வானி, அமீர்கான், ஹேமர் போன்ற 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சாஜகான் சைமன் மற்றும் ஜாகித் ஆகிய இருவர் ஓசூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து விட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பரத் தேஸ்வாணியின் அவரது தந்தையான வினோத் தேஸ்வாணி கடந்த 4 நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். எனவே கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் அவர் பெயரில் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் நோட்டீஸ் அனுப்பி வைத்தனர். இதனால் மும்பை விமான நிலையத்தில் இறங்கிய உடனே அதிகாரிகள் அவரை கைது செய்து விட்டனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்று ஓசூர் தனிப்படை போலீசார் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.