சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை 5000ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபரிமலையில் இந்த ஆண்டில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இது கொரோனா காலம் என்பதால், தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. 10 வயது மற்றும் 60 வயதிற்கு இடையில் உள்ள பக்தர்களுக்கு முன்பதிவு செய்துள்ள 24 மணி நேரத்திற்கு முன்பே கொரோனா நெகட்டிவ் சான்று மற்றும் மலையேறும் உடற்தகுதி உள்ளிட்ட சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தினசரி ஆயிரம் பக்தர்களும் சனி – ஞாயிறுகளில் 2000 பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் பொருளாதார ரீதியாக, நிதி நெருக்கடியில் தரிசனத்துக்கு அனுமதி கிடைக்காத பக்தர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் நோக்கில் கடந்த டிசம்பர் முதல் தேதியில் இருந்து தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை ஆயிரத்திலிருந்து 2000 ஆகவும், சனி ஞாயிறுகளில் இரண்டாயிரத்தில் இருந்து 3000 ஆகவும் அதிகரிக்கப்பட்டது.
இந்த சூழலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய மும்பதிவு செய்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு வரும் 20 ஆம் தேதியிலிருந்து ( ஞாயிற்றுக்கிழமை ) தினசரி தரிசனத்திற்கு 5000பேராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பும், பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் குறித்தும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.