பொதுமக்கள் நடமாட்டம் இன்றி கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகளும் 10 மணிக்கு மேல் மூடப்பட்டன.
இதனையடுத்து அங்கு உள்ள வடகோவை மேம்பாலம், காந்திபுரம் இரண்டு அடுக்கு மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம் போன்றவற்றில் காவல்துறையினர் வாகனங்கள் செல்லாதவாறு இரும்பு தடுப்புகளை வைத்து அடைத்து விட்டனர். இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாடு விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.