TNPSC குரூப் 4 முறைகேடு தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 14 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். குறிப்பாக இந்த வழக்கில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி போலீசார் விசாரணையில் வெளிவந்திருக்கிறது. அடுத்த கட்டமாக அரசு அதிகாரிகள் யார் ? என்பதை கண்டுபிடித்து அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். ராமேஸ்வரம் , கீழக்கரை என முறைகேடு நடந்த 2 தேர்வு மையத்திற்கு சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.
குரூப் ஃ4 தேர்வு முறைகேடு தொடர்பாக இது வரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறிப்பாக முறைகேடு செய்ய காரணமாக இருந்த டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் , ஓட்டுநர்கள் இடைத்தரகர் என கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்நிலையில் முறைகேடு தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கை என்ன ? முறைகேடு எப்படி நடைபெற்றது ? என்று பணியாளர்கள் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் TNPSC அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , ஒரு சில சென்டரில் இதுமாதிரி முறைகேடு நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாக உள்ளது. அதை வைத்து நாம் ஒட்டுமொத்தமாக தேர்வாணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கக் கூடாது. எதிர்காலத்தில் 100 சதவீதம் அளவிற்கு முறைகேடு இல்லாமல் முழுமையான உத்திரவாதம் எடுத்து வருகின்றோம்.
சிபிசிஐடி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதில் உள்ள கருப்பு ஆடுகள் எங்கே இருந்தாலும் , எவ்வளவு பெரிய புள்ளியாக இருந்தாலும் பாரபட்சம் கிடையாது. குற்றம் செய்தால் சிறு புள்ளியாக இருந்தாலும் சரி , கரும்புலியாக இருந்தாலும் சரி , பெரும் புலியாக இருந்தாலும் சரி அது களை எடுக்கப்பட்டும்.
தண்டனை கொடுக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு எல்லாவிதமான நடவடிக்கையையும் எடுப்போம். ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய இளைஞர்களும் தங்கள் எதிர்காலம் குறித்து பயப்பட தேவை இல்லை , அச்சம் கொள்ளத் தேவையில்லை. தேர்வை ரத்து செய்ய கோருவது சரியில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.