மூதாட்டியை ஏமாற்றி 13 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிய குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தொடர்ந்தனூர் பகுதியில் ராமலிங்கத்தின் மனைவியான பொன்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் காம்பட்டு பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் பொன்னம்மாளின் உறவினரான சுந்தரராஜன் என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று முதியோர் காப்பீடு திட்டத்தில் அவரை சேர்ப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அதற்குரிய அரசு அலுவலகத்திற்கு வருமாறு சுந்தரராஜன் கூறியதை நம்பிய பொன்னம்மாள் அவருடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் பொன்னம்மாளை அழைத்து சென்று அவருக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை சுந்தர்ராஜன் விழுப்புரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தனது பெயருக்கு எழுதி வாங்கி விட்டார். இதனையடுத்து சுந்தர்ராஜன் தனது நிலத்தை மோசடி செய்து எழுதி வாங்கியதை அறிந்த பொன்னம்மாள் தனது நிலத்தை திருப்பி தருமாறு அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த இடத்தை திருப்பி தரமுடியாது என கூறியதோடு, அவரை கொலை செய்து விடுவதாக சுந்தர்ராஜன் பொன்னம்மாளை மிரட்டி உள்ளார். இதுகுறித்து பொன்னம்மாள் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுந்தரராஜன் கைது செய்தனர். அதன் பின் அவரை விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.