பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு போன்ற நெருக்கடிக்கு இம்ரான்கான் ஆட்சி தான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் அவர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பை துணை சபாநாயகர் நிராகரித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து இம்ரான் கான் புதிதாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “அதிபருக்கு நாடாளுமன்றத்தை கலைக்க நான் கடிதம் எழுதினேன். என்னென்றால் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தலுக்கு தயாராகும் பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ரத்து செய்த காரணத்திற்காக துணை சபாநாயகரின் முடிவை எதிர்த்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தை நாடபோவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளனர்.