பாகிஸ்தான் பிரதமரான இம்ரான்கான், தன் பதவியை பறிக்க வெளிநாட்டு சதி நடக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுவதற்கும், பணவீக்கம் அதிகரித்திருப்பதற்கும் பிரதமர் இம்ரான்கானின் அரசு தான் காரணம் என்று கூறி அவரின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
மேலும் இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்களே நம்பிக்கையற்ற தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வாய்ப்பிருப்பதால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கவுள்ள பிரதமர் இம்ரான் கானை ஆதரிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த மக்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பிரதமர் இம்ரான்கான் பேசியதாவது, என்னை பதவியிலிருந்து நீக்க வெளிநாட்டு சதி நடக்கிறது. இதற்கென்று பிற நாடுகளிலிருந்து பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். மேலும், எங்களுக்கு எழுத்துப்பூர்வமாகவும் அச்சுறுத்தல் வந்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.