அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று இன்னும் 2 வருடங்களுக்கு ஸ்டாலின் சொல்லிக்கொண்டே தான் இருப்பார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அமமுகவில் இருந்து விலகி தங்க தமிழ்ச்செல்வன் திமுக கட்சியில் தனது தொண்டர்களுடன் சென்று இணைந்தார். இது அரசியல் களத்திலையே மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக கட்சியை சேர்ந்த பலர் இதனை விமர்சனம் செய்தனர். குறிப்பாக அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் இணைந்திருந்தால் நிரந்தர ஹீரோவாக இருந்திருப்பார், ஆனால் திமுகவில் இணைந்ததால் ஒருநாள் ஹீரோவாக இருக்கலாம், ஆனால் மறுநாளில் இருந்து அவர் ஸிரோவாகத்தான் தெரிவார் என்று கேலிப்பேச்சு பேசினார்.
அமமுகவை சேர்ந்த புகழேந்தி என்பவரும் அவர் கட்சியை விட்டு பிரிந்து சென்றதால் எந்த வித இழப்பும் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். இது மிகப்பெரிய விவாத பொருளாக மாறி இருக்கும் நிலையில் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து கூறுகையில்,
அமமுக கட்சியில் இருந்து விலகி வருவோரில் பெரும்பாலானோர் அதிமுகவிலேயே அதிகம் இணைவர் ஆனால் ஒரு சிலர் மட்டுமே திமுகவில் சென்று இணைந்துள்ளனர் என்று கூறியுள்ளார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் கலைந்துவிடும் என்று இன்னும் இரண்டு வருடங்களுக்கு சொல்லிக் கொண்டேதான் இருப்பார் என்றும் கிண்டல் செய்து பேசி உள்ளார். மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.