நாட்டில் சுமார் 216 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” கடந்த 28 நாட்களாக சுமார் 42 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 3,390 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், 1,273 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை, 16,540 கொரோனா நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், நாடு முழுவதும் தற்போது மீட்பு விகிதம் 29.36% ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது 37,916 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ” ரயில்வே நிர்வாகம் 5,231 பெட்டிகளை கோவிட் பராமரிப்பு மையங்களாக மாற்றியுள்ளது.
அவை அடையாளம் காணப்பட்ட 215 நிலையங்களில் வைக்கப்படும் என்றும் லேசான மற்றும் மிகவும் லேசான அறிகுறியுடன் பதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் சந்தேகத்திற்கிடமான மற்றும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வெவ்வேறு பெட்டிகள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.