புரெவி புயல் பாம்பன் அருகே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாம்பனில் இருந்து வட கிழக்கு திசையில் 90 கிலோ மீட்டர் தொலைவில் புரெவி புயல் மையம் கொண்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு திரிகோணமலையில் கரையை கடந்தது. புரெவி புயல் கரையை கடக்கும்போது 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதைய நிலையில் கிழக்கு தென்கிழக்கு திசையில் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டிருந்தது. தொடர்ச்சியாக மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து பாம்பனில் இருந்து தற்போது 90 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக சொல்லப் பட்டுள்ளது.
3ஆம் தேதி காலை ( இன்று ) மன்னார் வளைகுடா அருகே செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று பிற்பகல் பாம்பன் அருகே சென்று நிலைகொள்ளும் என்று சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறாக நிலை கொள்ளும் போது பரவலாக அனைத்து இடங்களிலுமே மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. தற்போதைய நிலையில் சென்னையில் மழை ஓய்ந்து இருக்க கூடிய நிலையில் மீண்டும் மழை பெய்வதற்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
குமாரி – பாம்பனுக்கு இடையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை கரையை கடக்கும் என என்ற தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அது புயல் கரையை கடந்தால் காற்றும், மழையும் அதிகமாக இருக்கும். சற்று வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் பட்சத்தில் காற்றின் வேகத்தில் குறைவு இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
கடற்கரை ஓரமாக செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான காற்று வீசுகின்றது. கடல் சீற்றத்துடன் காணப்படுகின்றது. அதன் காரணமாக கடலோர பகுதிகள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார் வளைகுடா, குமரி கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு – மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சொல்லப்பட்டுள்ளது. குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை இரண்டு முதல் 4.5 மீட்டர் உயரம் வரைக்கும் கடல் அலைகள் எழும்பக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்று ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.