Categories
தேசிய செய்திகள்

மனிதாபிமானமற்ற செயல்… ஜேசிபியின் மூலம் அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடல்..!!

ஆந்திராவில், 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது உடலை ஜேசிபியின் உதவியோடு அகற்றி, நகராட்சி ஊழியர்கள் புதைத்துள்ளனர்..

ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் உதயம்புரம் தாலுகா பலசா நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 72 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார். மரணத்திற்குப் பின்பே அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதனையடுத்து அந்த முதியவரின் உடலை தொற்று பரவிவிடுமோ என பயந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நகராட்சி ஊழியர்கள் தூக்கிச் சென்றனர்.

ஜேசிபி வாகனத்தின் பின்புறம் நகராட்சி ஊழியர்கள் முழு கவச பாதுகாப்பு உடையணிந்து நிற்க, டிரைவர் வண்டியை இயக்கி சென்றார்.. அந்த முதியவரின் உடல், ஜேசிபியின் முன்னால் உள்ள தொட்டியில் வைக்கப்பட்டிருந்தது.. இந்நிலையில், ஜேசிபி வாகனம் சுடுகாட்டுக்குச் சென்றது. அதன்பின்னர் முதியவரின் உடலுக்கு  தீ மூட்டி தகனம் செய்யப்பட்டது.

இது பற்றி முதியவரின் உறவினர்கள் கூறுகையில், “இது மனிதத் தன்மையற்ற செயல். அவரின் உடலை எடுத்துச் செல்வதற்கு எந்த விதிமுறையும் பின்பற்றப்படவில்லை” என்று வேதனையுடன் தெரிவித்தனர்..

இந்நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சியை பகிர்ந்து முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு டுவிட்டரில், “கொரோனா வைரசால் இறந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக்கால் மூடப்பட்டு  ஜேசிபி அல்லது டிராக்டர்இயந்திரத்தில் ஏற்றப்படுகிறது. மரணத்தில் கூட அவர்களுக்கு மரியாதை, கண்ணியம் மறுக்கப்படுகிறது. இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயலுக்காக ஒய்.எஸ் ஜெகன் மோகன் அரசாங்கம் வெட்கப்பட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

https://twitter.com/ncbn/status/1276535438291820544

இதேபோல தொடர்புடைய இன்னொரு சம்பவம், சோம்பேட்டை நகரில் கடந்த 24ஆம் தேதி நடந்துள்ளது.. அப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்த பெண் ஒருவரின் சடலம் டிராக்டரில் ஏற்றி செல்லப்பட்டுள்ளது.. இந்நிலையில் உதயம்புரம் சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜே.நிவாஸ் விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |