பீகாரில் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கார்ப்பியோ காரும், டிராக்டரும் பயங்கரமாக மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருந்து பீகாரின் பரவுணி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த நிலையில் பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் காந்தி என்ற இடத்தின் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மிகவும் வேகமாக வந்த ஸ்கார்பியோ காரும், செங்கல் ஏற்றி வந்த டிராக்டரும் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் ஸ்கார்பியோ காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி விட்டது. அதேபோல டிராக்டரும் உருக்குலைந்து போய் செங்கல்கள் கீழே சிதறியது.
இந்தக் கோர விபத்தில் 11 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் முசாபர்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.