கொரோனா பீதியின் காரணமாக பிரேசிலில் 1500 கைதிகள் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டனர்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே பிரேசில் நாட்டில் 234 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி விட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா மேலும் பரவாமல் இருக்க நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது பிரேசில்..
குறிப்பாக சொல்லப்போனால் அந்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை உறவினர்கள் சந்திக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தனிமைபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அந்நாட்டின் சாவ் பாலோ மாகாணத்தில் இருக்கும் 4 சிறைச்சாலைகளில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 1, 500-க்கும் அதிகமான கைதிகள் கொரோனா பீதியின் காரணமாக சிறைச்சாலைகளில் இருந்து தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து தப்பிச்சென்ற கைதிகள் அனைவரையும் தீவிரமாக தேடிவருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.