சென்னையில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாட்டாங் குப்பம் கெனால் தெருவை சேர்ந்த ஹரி என்கிற ஹரிகிருஷ்ணன் (வயது 25) என்பவர் நேற்று இரவு தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு அரிவாளுடன் வந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் அவரது தலை, உடம்பு, கை மற்றும் கால் என சரமாரியாக வெட்டி கொடூர படுகொலை செய்தனர். அதுமட்டுமில்லாமல் ஆத்திரம் அடங்காத அவர்கள் அவரது மண்டையை இரண்டாக வெட்டி மூளையை தனியாக ஒரு தட்டில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து தகவலறிந்த அண்ணா சதுக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி கஸ்தூரிபாய் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஹரி திருட்டு, வழிப்பறி போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக பல்பு என்று அழைக்கப்பட்ட குமார் என்பவரை ஹரி வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் ஹரி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.