சென்னையில் போலீஸ் என்று அறிமுகப்படுத்தி கொண்டு முதியவரிடம் பணம் பறித்து ஏமாற்றி வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் தாங்கல் ஏரிக்கரை தெருவை சேர்ந்த 67 வயதான மாநகராட்சி முன்னாள் துப்புரவு பணியாளர் குப்பானந்தன் கடந்த 1-ம் தேதி கேகே நகர் பங்காரு காலனி தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தான் ஒரு போலீஸ் என குப்பானந்தனிடம் கூறி அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று கொண்டிருப்பதாகவும், அதனால் உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளில் உள்ள எண்களை சரிபார்க்க வேண்டும் என்று குப்பானந்தாவிடம் பணத்தை வாங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் 4 மோதிரத்தையும் பிடுங்கிவிட்டு, ரூபாய் நோட்டு எண்களை சரிசெய்துவிட்டு திரும்பி வருவதாக சொல்லி விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை.
இதையடுத்து தான் ஏமாந்து விட்டதை உணர்ந்த முதியவர் போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் படி போலீசார் அங்கு பதிவான சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில் அந்த நபர் பழைய குற்றவாளி மகேஷ் என்ற மகேந்திரன் என்பது தெரியவர, அவனை கைது செய்த போலீசார் அவனிடம் நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
குற்றவாளி மகேஷ், முதல் வாரத்தில் வங்கிகளுக்கு சென்று பென்சன் பணத்தை எடுத்து வர செல்லும் முதியவர்களை டார்கெட் செய்து தன்னை போலீசார் என்று அறிமுகப்படுத்தி கொண்டு அவர்களை ஆட்டோவில் ஏற்றி சென்று மிரட்டி பணம் பறித்து விட்டு தப்பி செல்வதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மகேஷை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது