டெல்லியில் தற்போது கொரோனாவிற்கு 31 ஆயிரத்து 308 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக தொற்று குறைய தொடங்கியுள்ளது. டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு கொரோனா தொற்றானது தற்போது குறைந்து கொண்டு வருகின்றது. இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2,260 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,15,219 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 182 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,013 ஆக உயர்ந்துள்ளது. மேலும் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,453 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். டெல்லியில் தற்போது 31,308 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.