அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிகளுக்கு ஜனவரி2, 3 தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிக்கு முதன் முறையாக முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 2(நாளை), 3ம்(நாளை மறுநாள்) தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 742 பேர் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து இந்த 742 பேருக்கும் ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வரிசை எண் 1 – 400 வரை இடம் பெற்றுள்ளவர்களுக்கு ஜனவரி-2ம் தேதியும், வரிசை எண் 401 – 742 வரை இடம் பெற்றுள்ளவர்களுக்கு ஜனவரி-3ம் தேதியும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் தேர்வர்கள் அனுமதிச் சீட்டு, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களையும் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்வர்களின் கல்விச் சான்றிதழ்களைக் கவனமாக சரிபார்க்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.