இந்தோனேசியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்கு அங்கு இரவு நேரத்தில் மனிதர்களுக்கு பேய் வேடமிட்டு நூதன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
கொரோனா என்ற கொடிய வைரஸ் மக்களை கொன்று குவித்து உலகையே உலுக்கி வருகிறது.. இந்த வைரசை எப்படியாவது அழிக்க வேண்டும் என பல்வேறு நாடுகளும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆனால் இதனை அழிக்க இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை..
ஆகவே தனிமைப்படுத்தல் மற்றும் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.. இதனால் கொரோனாவுடன் போர் செய்து வரும் பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி, மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது, வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.
ஆனாலும் ஒரு சில நாடுகளில் கொரோனா தாக்கம் புரியாமல், மக்கள் ஊரடங்கை கடைபிடிக்காமல் வழக்கம்போல் வீதிகளில் நடமாடி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த போலீசார் விழிப்புணர்வு மற்றும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் அவர்கள் வெளியே நடமாடுகின்றனர்..
இந்த நிலையில் இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் இருக்கும் கெபு என்ற கிராமத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தடுக்க ஒரு நூதன நடவடிக்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதாவது, மக்களை பயம் காட்டி வீடுகளுக்குள்ளேயே இருக்க செய்யும் விதமாக, இரவு நேரத்தில் மனிதர்களுக்கு வெள்ளை நிற துணியை கட்டி பேய் வேடமிட்டு அந்த கிராமத்தின் தலைவர் சாலைகளில் நடமாட விட்டுள்ளார்..
இதுகுறித்து அவர் கூறுகையில், “நாங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்தியுள்ளோம்.. இது நல்ல பலன் அளித்துள்ளது. தொடக்கத்தில் இதை நாங்கள் தனியாக தான் செய்துவந்தோம். தற்போது போலீசாரும் எங்களுடன் கைக்கோர்த்து இது போல செய்கின்றனர்” என்று கூறினார்.. கொரோனாவிற்கு பயப்படாதவர்கள் தற்போது பேய்க்கு பயந்து வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.