இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 627 பேர் கொரோனாவால் பலியான நிலையில், மொத்தம் 4032 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா தற்போது இத்தாலியை நிலைகுலையைச் செய்துள்ளது. இத்தாலியில் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு தொடர்ந்து 5 நாட்களாக தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். அந்நாட்டில் கடந்த 4 நாட்களாக சராசரியாக 300 முதல் 400 பேர் பலியாகியுள்ள நிலையில், நேற்று ஒரேநாளில் மட்டும் 627 பேரை கொரோனா வேட்டையாடியிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஏற்கனவே அங்கு 47,000 பேர் பாதிப்புக்குள்ளான நிலையில் நேற்று மட்டும் புதிதாக 6,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் அங்கு மொத்தம் 4,032 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் சீனாவில் பலியானோர் எண்ணிக்கை 3,248 ஆக இருக்கிறது.. ஆனால் இந்த எண்ணிக்கையை இத்தாலி தற்போது கடந்து சென்றுவிட்டது.
மேலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவப் பணியாளர்களில் 3,500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் 17 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு அரசு வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், வைரஸ் தாக்குதலால், பலி எண்ணிக்கை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இத்தாலி மக்கள் பீதியில் உறைந்து போய் இருக்கின்றனர். பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அஞ்சுகிறார்கள்.
இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினிலும் நேற்று ஒரேநாளில் 262 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே அங்கு 1,100 பேர் உயிரிழந்த நிலையில் புதிதாக 6,000 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. அதேபோல ஈரானிலும் நேற்று ஒரேநாளில் 150 பேர் இறந்துள்ளனர். இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 1500ஐ நெருங்கியுள்ளது..
மேலும் பல நாடுகளில் கொரோனா உயிர்பலி வாங்கி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் இந்த கொடிய வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஒருபக்கம் நீடித்து கொண்டே இருந்தாலும், அதனை பரவாமல் தடுக்கும் பணியையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் உலகநாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.