ஜெய்ப்பூரில் இளம்பெண்ணை காரில் வைத்து இருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது நாக்கை கடித்து விட்டு தப்பி விட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஜெய்ப்பூரை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட பின் வீடு திரும்புவதற்காக வாடகை காரை அழைத்துள்ளார். அப்போது அந்த காரில் டிரைவர் தவிர இன்னொரு நபரும் இருந்துள்ளார். சிறிது தூரம் கார் புறப்பட்டு செல்ல தொடங்கியதும் காரில் இருந்த இருவரும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
மேலும் தங்களிடம் உள்ள பொம்மை துப்பாக்கியை வைத்து பெண்ணை மிரட்டி வன்கொடுமை செய்ய முயன்றபோது அப்பெண் பயப்படாமல் அவர்களை தாக்கிவிட்டு சாமர்த்தியமாக அவர்களில் ஒருவர் நாக்கை கடித்து தப்பித்துள்ளார். இதையடுத்து அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று நடந்ததை கூற, உடனே அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதே நேரத்தில் அப்பெண் செல்போனை காரிலேயே விட்டு வந்துள்ளார். உடனே அந்த செல்லுக்கு போலீசார் அழைப்பு கொடுக்க, அதை டிரைவர் சுரேஷ் வெர்மா எடுத்து பேச, அதை வைத்து டிரைவரை கைது செய்தனர். பின்னர் மருத்துவமனையில் கடிபட்ட நாக்குடன் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு குற்றவாளி சச்சின் சர்மாவையும் போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பெண்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பயமில்லாமல் தைரியமாகச் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய உதவிய அந்த பெண்ணுக்கு போலீசார்உட்பட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.