நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வைரஸ் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதாக உயிர் பலி வாங்கிவிடும் என்பதால், உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காகவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட இயற்கை முறை சாறுகள், முட்டை, இறைச்சிகள் ஆகியவற்றை மக்கள் அதிகளவில் உணவில் சேர்த்துவருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த 6 பேர் உடும்புக் கறியை சாப்பிட்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்றும், கொரோனா தொற்று நோய் தாக்காது என்றும் கருதியுள்ளனர்.. இதனால் அவர்கள் ஆரல்வாய்மொழி தெற்கு மலைப் பகுதியில் ஒரு உடும்பை வேட்டையாடி, பிடித்து அதனை மலை அடிவாரத்தில் மறைவான இடத்தில் வைத்து சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்துள்ளனர்.. அதேநேரத்தில் வனத் துறையினருக்கு உடும்பை வேட்டையாடி சாப்பிடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்ற வனத் துறையினர், அங்கு 6 பேர் சாப்பிட்டு கொண்டிருப்பதை பார்த்தனர். அப்போது வனத் துறையினரைக் கண்ட அந்தக் கும்பல் பதட்டத்துடன் அங்கிருந்து தப்பியோடியது. வனத்துறையினரும் விடாமல் துரத்தி சென்றனர்..
இதில் கருங்குளம் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (வயது 19), கண்ணன் (வயது 20), பாலகிருஷ்ணன் (வயது 24) ஆகிய 3 பேரை வனத் துறையினர் துரத்திப் பிடித்து கைதுசெய்துள்ளனர். மேலும், தப்பி ஓடிய கணேஷ்குமார், சுடலை, மாதவன் ஆகியோரை தீவிரமாக வனத் துறையினர் தேடி வருகின்றனர்.