கராச்சியில் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் அந்தப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சியில் சில தினங்களாக பேய் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற 90 வருடங்களாக இல்லாத மழையாக தற்பொழுது பெய்து வருகிறது எனவும் அந்நாட்டு மக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் அங்கு உள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டு போக்குவரத்து எதுவும் இல்லாமல் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் 90க்கும் மேற்பட்ட மக்கள் இந்த பேய் மழையால் பலியாகியுள்ளனர்.
கராச்சியில் மிகவும் விசேஷமான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கப்பல்களுக்கு எடுத்துச்செல்லப்படும் கண்டெய்னர்கள் தண்ணீரில் மிதந்து வருகின்றன. மேலும் அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. மேலும் அந்த வழியாக செல்லும் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் அனைவரும் பேருந்தின் மேல் பகுதியில் ஏறி சென்று பயணிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் எப்பொழுதும் மக்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு செயல்படுவார்கள். ஆனால் அந்த நாட்டில் இந்த மழை வெள்ளத்தால் சிக்கிக் கொண்ட போலீசாரை மக்கள் கயிறு வைத்து கட்டி இழுத்து காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் கராச்சியில் இத்தகைய பேய் மழை பெய்து வீடுகள் வெள்ளக்காடாக மாறி சாலைகள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளத் தடுப்பு பணிகளை விரைவில் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என அந்நாட்டு மக்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.