Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி… மந்திரி சுரேஷ் குமார் அறிவிப்பு….!!

 கர்நாடக மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்வு இன்றி தேர்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில்  கொரோனா 2-வது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகின்றது. கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. மாநிலத்தின் கொரோனா  மொத்த பாதிப்பில் 70 சதவீதம் பெங்களூரில் உள்ளன. கொரோனா நோய் பரவுவதைத் தடுக்க பெங்களூரு மைசூரு உள்பட 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன.கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் முழுமையாக மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்வு இன்றி தேர்ச்சி செய்ய முடிவு செய்துள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்திக்குறிப்பில் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் கர்நாடகத்தில் கொரோனாவின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு உள்ளனர். மாணவர்களின் கல்வித்திறன் செயல்பாடுகளை ஆசிரியர்கள் மதிப்பீட்டு மதிப்பெண் வழங்க வேண்டும்.1 முதல் 5 வகுப்புவரை மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ வகுப்புகள் நடத்தப்படாததால் இவர்களுக்கு மதிப்பீட்டு மதிப்பெண் வழங்க தேவை இல்லை.

அதன்பின் 6 முதல் 9-ம்  வகுப்பு வரையுள்ள மாணவர்கள் நேரடியாக வகுப்புகளுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு ஆசிரியர்களால் பாடம் எடுக்கப்பட்டு தொலைக்காட்சி, இணைய வழி, ஆன்லைன் மூலமாகவும் முழுமையாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் இந்த மாணவர்களுக்கு அவர்களின் கற்றறிந்த திறன் அடிப்படையில் மதிப்பெண்களை வழங்கும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ ஆண்டின் இறுதி தேர்வு நடத்தப்பட கூடாது.

கற்றல் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தேர்ச்சி பெறுவதற்காக அல்ல. அவர்களின் கற்றல் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ளவே இந்த மதிப்பீட்டு திறன் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது. இந்த மதிப்பீட்டை வைத்து அடுத்த ஆண்டின் கல்வி வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்த உதவுகின்றன. இந்த மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டில் ஒரு தேர்வு நடத்தி அவர்களிடம் உள்ள கற்றல் திறனை அறிந்து குறைபாடுகளை கண்டறியப்பட்டு அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கர்நாடக மாநிலத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு அடுத்த கல்வி ஆண்டு தொடங்கப்பட உள்ளது. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் மாதம் 15-ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 14ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூன் மாதம் 21-ம் தேதி முதல் ஜுலை 5-ம் தேதி வரை 10-ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது.

இதன் பிறகு ஜூலை 15-ஆம் தேதி முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஆண்டு தொடங்குகின்றன. இந்த கால அட்டவணை தற்காலிகமானது. கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அவ்வப்போது பிறப்பிக்கும் உத்தரவுகளை கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். கொரோனா நோய் பரவல் அதிகரித்து கட்டுக்குள் கொண்டுவர முடியாத பட்சத்தில் கால அட்டவணைகள் மாற்றப்படலாம் என்றும் சுரேஷ்குமார் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

Categories

Tech |