கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் கடந்த சில நாட்களாக பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, கென்யாவின் மேற்கு பொக்கோட் மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏழு குழந்தைகள் உட்பட 60 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சாலைகள், பாலங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மேற்கு பொகோட்டா மாவட்ட ஆணையர் அபோலோ ஒக்கிலோ கூறினார். மேலும், “இந்த நிலச்சரிவில் சிக்கிக் காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்றார்.
நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கு ராணுவத்துறை, காவல் துறை ஹெலிகாப்டர்கள் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதேபோன்று, நிலச்சரிவு ஏற்படக்குடிய பகுதிகளை விட்டுவிட்டு பொதுமக்கள் பாதுகாப்பு இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழைக் காரணமாக கென்யாவின் அண்டை நாடுகளான சோமாலியா, தெற்கு சூடானும் பாதிக்கப்பட்டுள்ளன.