நாகர்கோவிலில் 20 நாள் பேஸ்புக் பழக்கத்தில், இளைஞரிடம் 11 பவுன் நகையை கொடுத்து பெண் ஒருவர் ஏமாந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் இருக்கின்றனர்.. இந்த பெண்ணுக்கும் கணவருக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் அந்தப்பெண் தனியாக வசித்து வருகிறார். தற்போது அந்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிகின்றது.
இந்நிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு பேஸ்புக் மூலம் ஒரு இளைஞர் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவரும் செல்போன் மூலம் பேசிக்கொள்ளும் அளவிற்கு மிகவும் நெருக்கமாகியுள்ளனர். அந்த இளைஞர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கொஞ்சி கொஞ்சி மிகவும் பாசத்துடனும், அன்புடனும் பேசியுள்ளார்.. ஆனால் தனது போட்டோவையோ, தான் வசித்து வரும் இடத்தையோ இளைஞர் அந்த பெண்ணிடம் சொல்லவில்லை.
இதனிடையே இளைஞர், தான் பெட்ரோல் விற்பனை நிலையம் (பெட்ரோல் பங்க்) திறக்க இருப்பதாகவும், அதற்கு ரூபாய் 50 லட்சம் பணம் தேவைப்படுகிறது என்று அந்த பெண்ணிடம் சொல்லியிருக்கிறார். இதற்காக தான் வங்கியில் லோன் கேட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் லோன் பெற முதலில் வங்கியில் ரூ 80,000 செலுத்த வேண்டும் என்று கூறியதோடு மட்டுமில்லாமல் அதற்காக அந்த பெண் அணிந்திருந்த நகையையும் கேட்டுள்ளார். இளைஞரின் வசீகர பேச்சில் மயங்கி போன அந்த பெண், சற்றும் யோசிக்காமல் தான் அணிந்திருந்த 11 பவுன் நகையை வாலிபரிடம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
அதாவது, நகையை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு கவரிங் கடையில் வைத்து கொடுத்துள்ளார். பின்னர் வங்கிக்கு சென்று லோன் வாங்கி வருகிறேன் என்று கூறி விட்டு சென்ற இளைஞரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.
இதனால் அந்த பெண் போன் செய்து பார்த்தார்.. ஆனால் இளைஞரின் செல்போன் தொடர்ந்து சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் மறுபடியும் போன் செய்து பார்த்தார்.. தொடர்ந்து இதே நிலை தான் நீடித்தது.. அதன் பிறகு தான் இளைஞரிடம் நகையை கொடுத்து ஏமாந்து விட்டோம் என்று அந்த பெண்ணுக்கு தெரிய வந்தது..
இதனால் அதிர்ச்சியடைந்த சம்பந்தப்பட்ட பெண் கோட்டார் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.. ஆனால் அந்த இளைஞர் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த விவரங்களும் தெரியவில்லை.. எனவே நகை கொடுக்கப்பட்ட கடைக்கு காவல்துறையினர் சென்று, அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.. அப்போது நகையை வாங்கிச் செல்லும்போது இளைஞர் ‘மாஸ்க்’ போட்டு இருந்தார். இதனால் இளைஞரை காவல்துறையினரால் அடையாளம் காண முடியவில்லை.
மேலும் இளைஞரின் பேஸ்புக் கணக்கை காவல்துறையினர் ஆய்வு செய்ததில், அதுவும் போலியாக உருவாக்கப்பட்டது தெரியவந்தது. அதில் இளைஞரின் போட்டோவோ, முகவரியோ எதுவும் இல்லை. எனவே இதுபோல போலியாக கணக்குகள் தொடங்கி பலரையும் அந்த இளைஞர் ஏமாற்றியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வலைவீசி தேடி வருகின்றனர்.