தண்ணீர் பிரச்சனை காரணமாக பக்கத்து வீட்டு பெண்ணின் முகத்தில் வெட்டிய சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த அமரேசன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் சுபாஷினி மற்றும் மோகன் இவர்கள் இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதே பகுதியில் வசித்து வருபவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் இவர் தலைமைச் செயலக பணியாளர் மற்றும் சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார் .
இந்நிலையில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் மின்மோட்டாரை பயன்படுத்தியுள்ளார் மோகன். இதனையடுத்து அங்கே வந்த ஆதிமூல ராமகிருஷ்ணன் மின் மோட்டார் ஏன் பயன்படுத்தினீர்கள் என்று மோகனிடம் சண்டையிட்டு உள்ளார். இதன்பின் பேச்சுவார்த்தை முற்ற திடீரென்று மோகனை பிடித்து அடித்து உதைத்துள்ளார் ஆதிமூல ராமகிருஷ்ணன்.
இதனை பார்த்த மோகனின் மனைவி ஏன் எனது கணவரை அடிக்கிறீர்கள் என்று கண்டித்துள்ளார். அதன்பின் ஆத்திரமடைந்த ஆதிமூல ராமகிருஷ்ணன் தன் வீட்டில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வந்து சுபாஷினி தாடையில் வெட்டியுள்ளார். இதனையடுத்து பலத்த காயம் அடைந்த அவர் தனியார் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு தாடையில் ஆறு தையல் போடப்பட்டதையடுத்து காவல்துறையினரிடம் காயத்துடன் சென்று தன்னையும் தனது கணவரையும் ஆதிமூல ராமகிருஷ்ணன் தாக்கியதாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தலைமை செயலக பணியாளரும் சட்டப் பேரவைத் தலைவரின் கார் ஓட்டுனரும் ஆன ஆதிமூல ராமகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.