சவுதியில் 26 வயது இளைஞனுக்கு 17 வயதில் செய்த குற்றச் செயலுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவில் வசித்து வந்த முஸ்தபா ஹசீம் அல் தரவிஷ் என்னும் இளைஞன் பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டது, 2011-2012-ம் காலகட்டங்களில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டது தொடர்பான புகைப்படங்கள் அவருடைய செல்போனில் இருந்ததாக கூறப்படுகிறது. சவுதி காவல்துறையினர் அவருடைய செல்போனில் இருந்த அந்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு கடந்த 2015-ஆம் ஆண்டு அந்த இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் சவுதி அதிகாரிகள் தீவிரவாத குழுவை உருவாக்கியதாக கூறி அந்த இளைஞர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் உண்மையை ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மனித உரிமைகள் குழு 17 வயதில் செய்த குற்றத்திற்காக மரண தண்டனை நிறைவேற்றப்படுவது அநியாயம் என்றும், சிறார்களுக்கு மரண தண்டனை ரத்து என்று சவுதி உறுதியளித்துள்ள நிலையில் அந்த இளைஞருக்கு மரண தண்டனை வழங்கியிருப்பது கொடுமையான ஒன்றே என்று கூறி தனது கண்டனத்தை முன்வைத்துள்ளது.
இதற்கிடையே தன் குற்றத்தை ஒப்பு கொண்ட தரவிஷ் அதிகாரிகள் துன்புறுத்தலால் தான் அதனை ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் சவுதி அதிகாரிகள் இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் சவுதி உள்துறை அமைச்சகம் தம்மம் என்னும் நகரில் தரவிஷ்-க்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் இதுகுறித்து அந்த இளைஞருடைய பெற்றோருக்கு கூட எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சவுதி அரசு சிறார்ளுக்கு மரண தண்டனையை ரத்து செய்துள்ள நிலையில் இவ்வாறு 17 வயதில் செய்த குற்றத்திற்காக அந்த 26 வயது இளைஞனுக்கு மரண தண்டனை நிறைவேற்றி இருப்பது சர்வதேச சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.